திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிடம் 4 மணி நேரம் போலீசார் விசாரணை - வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த எஸ்.ஐ.
தவெக வேட்பாளர் தாக்கப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிடம் சென்னை காவல்துறை நான்கு மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் 23ம் தேதியன்று மண்ணடி, அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள வாக்குச்சாவடி அருகே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் மோதல் தொடர்பாக வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார் இந்த விசாரணையை மேற்கொண்டனர்.
இச்சம்பவத்தின் போது முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவும் அவரது ஆதரவாளர்களும் தங்களைக் தாக்கியதாகத் துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் சினோரா அசோக் புகார் அளித்தார். மேலும், தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் காவல் ஆணையர் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
சினோரா அசோக்கின் புகாரின் அடிப்படையில், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் கொலை முயற்சி, சட்டவிரோதமாகக் கூடுதல், காயம் ஏற்படுத்துதல், மிரட்டல் விடுத்தல் மற்றும் தேர்தல் விதிகளை மீறுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவிடம் விசாரணை நடத்திய புகைப்படத்தைக் காவல் ஆய்வாளர் ராஜா தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸாக வைத்த விவகாரம் தற்போது காவல்துறை வட்டாரத்திலும் பொதுவெளியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
