"உழைப்பிற்கு அங்கீகாரம் இல்லை" - தவெகவில் இணைந்தார் திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஜெ.கருணாநிதி!

 
ஜெ.கருணாநிதி ஜெ.கருணாநிதி

சென்னை தி.நகர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஜெ.கருணாநிதி, திமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

அண்மையில் தனது கட்சிப் பதவிகளை அவர் ராஜினாமா செய்திருந்த நிலையில், தற்பொழுது தவெகவில் இணைந்துள்ளது சென்னை மற்றும் தமிழக அரசியல் வட்டாரங்களில் ஒரு முக்கியமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மண்டலக் குழுத் தலைவராகவும், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.நகர் தொகுதியின் திமுக எம்.எல்.ஏ-வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றியவர் ஜெ.கருணாநிதி.  கட்சியில் நீண்ட காலம் பணியாற்றியும் மற்றும் தொகுதிக்காக உழைத்தும், தனது உழைப்பிற்கு முறையான அங்கீகாரமும், தகுந்த மதிப்பும் திமுகவில் அளிக்கப்படவில்லை என்று அவர் அண்மைக் காலமாகவே அதிருப்தியில் இருந்து வந்தார்.

தி.நகர் கருணாநிதி

இந்த உட்கட்சி அதிருப்தியின் உச்சகட்டமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுகவில் தான் வகித்து வந்த முக்கியக் கட்சிப் பதவிகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அவர் ராஜினாமா செய்தார்.

திமுகவிலிருந்து வெளியேறிய ஜெ.கருணாநிதி தற்போது தவெகவில் இணைந்துள்ளார். சென்னை மாவட்டத் தவெகவின் அரசியல் நகர்வுகளிலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் களத்திலும் இவருடைய இந்த வரவு தவெகவிற்குச் சென்னை மையப்பகுதியில் கூடுதல் பலத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சென்னையின் முக்கியப் பகுதியான தி.நகரின் முன்னாள் எம்.எல்.ஏ-வே தற்போது தவெகவில் இணைந்துள்ளது, ஆளுங்கட்சியின் புதிய ஆள்சேர்ப்பு மற்றும் தேர்தல் வியூகங்களின் ஒரு முக்கியப் பகுதியாகப் பார்க்கப்படுகிறது.