முன்னாள் ஆளுநர் டாக்டர் டி.ஒய். பாட்டீல் காலமானார்!
புகழ்பெற்ற கல்வியாளரும், கொடையாளரும், பீகார், திரிபுரா மற்றும் மேற்கு வங்க ஆகிய மாநிலங்களின் முன்னாள் ஆளுநருமான பத்மஸ்ரீ டாக்டர். ஞான்தேவ் யஷ்வந்த்ராவ் (டி.ஒய்) பாட்டீல் (90) வயது முதிர்வு தொடர்பான உடல்நலக் குறைவுகளால் காலமானார்.
'டி.ஒய். பாட்டீல் குழுமம்' மூலம் நாட்டின் மிகப்பெரிய தனியார் கல்வி நெட்வொர்க்குகளில் ஒன்றை உருவாக்கினார். 182-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், 7 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், சர்வதேசப் பள்ளிகள் மற்றும் பன்முக சிறப்பு மருத்துவமனைகளை நிறுவி லட்சக்கணக்கான மாணவர்களுக்கு உயர்கல்வியும் மருத்துவச் சேவையும் கிடைக்கச் செய்தார்.
கல்வி மற்றும் சமூக நலத் துறைகளில் இவர் ஆற்றிய மிகச்சிறந்த சேவையைப் பாராட்டி, இந்திய அரசு 1991-ஆம் ஆண்டு இவருக்கு நாட்டின் உயரிய 'பத்மஸ்ரீ' விருதை வழங்கி கௌரவித்தது.
சட்டமன்ற உறுப்பினர்: மகாராஷ்டிர மாநில சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி, தனது சிறந்த நிர்வாகத் திறமையாலும் மக்கள் சார்ந்த பணிகளாலும் அங்கீகாரம் பெற்றார். பின்னர் திரிபுரா, பீகார் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகப் பொறுப்பேற்றுச் சிறப்பாகப் பணியாற்றினார். இவரது மறைவுக்குப் பல்வேறு மாநில அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
