முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சௌரவ் கங்குலி குடும்பத்திற்கு கொலை மிரட்டல் - கொல்கத்தா காவல்துறை வழக்குப்பதிவு!
இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ முன்னாள் தலைவருமான சௌரவ் கங்குலி மற்றும் அவரது மனைவி டோனா கங்குலிக்கு மர்ம நபர்களிடமிருந்து தொடர்ந்து கொலை மிரட்டல் கடிதங்கள் வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சௌரவ் கங்குலியின் கொல்கத்தா இல்லத்திற்கு கடந்த 6 மாதங்களாக அநாமதேய மிரட்டல் கடிதங்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. தொடக்கத்தில் இதை வழக்கமான கடிதங்கள் எனக் கருதி கங்குலி குடும்பத்தினர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், சமீபத்தில் வந்த கடிதத்தில் சௌரவ் கங்குலி, அவரது மனைவி டோனா கங்குலி மற்றும் குடும்பத்தினரை "முடித்து விடுவோம்" என நேரடியாகக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

மிரட்டல் வலுத்ததைத் தொடர்ந்து, சௌரவ் கங்குலி தரப்பில் கொல்கத்தாவில் உள்ள தாகூர்புகூர் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள கொல்கத்தா காவல்துறையினர், கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்துத் தபால் துறை உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அச்சுறுத்தல் காரணத்தால் சௌரவ் கங்குலியின் கொல்கத்தா இல்லத்தைச் சுற்றிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
