"நான் எங்கும் ஓடி ஒளியவில்லை" - காவல்துறைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடிதம்!
தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசிய வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகாதது குறித்து, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி காவல்துறைக்கு விளக்கம் அளித்துகடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளின்படி, அவரும் அவரது தம்பி அசோக்குமாரும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், இக்கடிதத்தின் மூலம் அவர் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

காவல்துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் செந்தில் பாலாஜி, குதிரை பேரம் தொடர்பாகத் தன் மீது காவல்துறை தரப்பில் எந்தவித அதிகாரப்பூர்வ வழக்கையும் பதிவு செய்யாதபோது, எதன் அடிப்படையில் விசாரணைக்கு நேரில் ஆஜராக முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
"நானும் எனது சகோதரரும் எங்கும் ஓடி ஒளியவில்லை. சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடவும் இல்லை" என்பதை அவர் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார். தன் மீது திட்டமிட்டுச் சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் முற்றிலுமாக மறுத்துள்ள அவர், தற்போதைய சட்டவிதிமுறைகளின்படியே இக்கடிதத்தின் மூலம் உரிய விளக்கமளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமலாக்கத்துறை இந்த வழக்கை கையில் எடுத்துத் தீவிரமாக விசாரித்து வரும் வேளையில், செந்தில் பாலாஜி அனுப்பியுள்ள இக்கடிதம் தமிழக அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.
