முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்திற்குச் சென்ற போலீஸ் - ஊழியர்களிடம் விசாரணை!
தமிழக அரசியல் வட்டாரத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே விவாதப் பொருளாக இருந்து வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை இல்லத்திற்குள் இன்று காலை காவல்துறையினர் திடீரென நுழைந்து விசாரணையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீதான பழைய வழக்குகளின் பின்னணியில் இந்த நகர்வு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை எம்.ஆர்.சி. நகரில்அமைந்துள்ள செந்தில் பாலாஜியின் தற்போதைய இல்லத்திற்கு இன்று காலை திடீரென வந்த சென்னை மாநகரக் காவல் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார், அங்கு விசாரணையைத் தொடங்கினர். இருப்பினும், காவல்துறையினர் வருகை தந்த அந்த சமயத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் இல்லை என்று தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, வீட்டில் பணியில் இருந்த அவரது உதவியாளர்கள் மற்றும் ஊழியர்களை ஒருசேர அமர வைத்து, போலீசார் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டனர்.
போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர் மீது இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து வரும் சூழலில், இந்தத் திடீர் போலீஸ் விசாரணை அரசியல் களத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அவரைப் பின்தொடர்ந்து கைது செய்யும் நோக்கோடு போலீசார் அங்குச் சென்றார்களா அல்லது ஏதேனும் வழக்கு தொடர்பான ஆவணங்களைச் சரிபார்க்கச் சென்றார்களா என்பது குறித்து காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமான எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. செந்தில் பாலாஜி இல்லத்தில் போலீஸ் விசாரணை நடத்திய தகவல் பரவியதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர் எம்.ஆர்.சி நகர் பகுதியில் கூடி வருவதால் அங்குச் சற்றே பதற்றமான சூழல் நிலவுகிறது.
