அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விலகல் - மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு"!

 
வைகை செல்வன்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். வைகைச்செல்வன் தனது விலகல் கடிதத்தை வெளியிட்டு இபிஎஸ் தலைமைக்குக் கடுமையான கண்டனங்களை முன்வைத்துள்ளார்.

தமது விலகல் அறிக்கையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய அரசியல் நகர்வுகளை வைகைச்செல்வன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

"தமிழகத்தில் தற்போதைய ஆளுங்கட்சியான தவெக-விற்கு எதிராகச் செயல்படுவதற்காக, பிரதான எதிர்க்கட்சியான திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்க அதிமுகவின் தற்போதைய தலைமை திரைமறைவில் திட்டமிட்டு வருகிறது. திமுகவுடன் கைகோர்க்கத் துடிக்கும் இந்த சுயநலப் போக்கால், பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வளர்த்த அதிமுக தனது சுய அடையாளத்தை முழுமையாக இழந்துவிட்டது," என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

"ஒரு இயக்கத்தில் உழைப்பவர்களுக்கு மதிப்பு இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய அதிமுக தலைமையில் மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு என்பதை நான் மிக ஆழமாகப் புரிந்து கொண்டேன். தொடர்ந்து உண்மையாக உழைக்கும் ரத்தத்தின் ரத்தங்கள் இங்கே திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள்" என்று வேதனை தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாகச் சாடி வைகைச்செல்வன் தனது அறிக்கையில் 
"களத்தில் நிற்கும் தொண்டர்கள் அழிந்துபோனாலும் பரவாயில்லை, தான் மற்றும் தன்னைச் சுற்றியுள்ள ஒருசிலர் மட்டும் நன்றாக இருக்க வேண்டும், பதவிகளை அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர் ஒருபோதும் நல்ல தலைவராக இருக்க முடியாது. அத்தகைய சுயநலத் தலைமையின் கீழ் என்னால் தொடர்ந்து பயணிக்க முடியாது என்பதால், கட்சியின் அனைத்து அடிப்படைப் பொறுப்புகளில் இருந்தும் நான் தற்பொழுது விலகுகிறேன்."

ஏற்கனவே மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் அதிமுகவிலிருந்து விலகித் தவெக-வில் இணைந்த அதிர்ச்சியே இன்னும் ஓயாத நிலையில், தற்பொழுது கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், நட்சத்திரப் பேச்சாளராகவும் வலம் வந்த முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனும் வெளியேறியிருப்பது இபிஎஸ் தலைமைக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.