முன்னாள் சபாநாயகர் தனபால் அப்பல்லோவில் அனுமதி... மருத்துவர்கள் தீவிர சிகிச்சை!

 
தனபால்

அதிமுகவின் மூத்த தலைவரும், தமிழகச் சட்டமன்ற முன்னாள் சபாநாயகருமான ப.தனபால், திடீர் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ப.தனபாலுக்குத் திடீரெனக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனுடன் அவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவும் திடீரென அதிகரித்துள்ளது. 

சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தவெக

இதனைத் தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் அப்போலோ மருத்துவமனையில் அவர் அவசரச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் அவருக்குத் தொடர்ந்து பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு, தீவிரச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ப.தனபாலின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சல் மற்றும் இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தத் தேவையான நவீன மருத்துவ சிகிச்சைகளும் மருந்துகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் உள்ள அவர், இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னாள் சபாநாயகர் ப.தனபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அதிமுக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் விரைவில் முழு நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என தொண்டர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தனபால் மகன் லோகேஷ் தவெகவில் அமைச்சராக இருப்பது குறிப்பிடத்தக்கது.