முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு வாய்ப்பு தரலை... அவிநாசி தொகுதி பாஜக-விற்கு ஒதுக்கீடு! பின்னணி என்ன?

 
தனபால் தனபால்

அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியுள்ள நிலையில், அவிநாசி தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வும், முன்னாள் சபாநாயகருமான பி. தனபாலுக்கு இம்முறை வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

அதிமுக - பாஜக இடையிலான தொகுதிப் பங்கீட்டில், தற்போது தனபால் சட்டமன்ற உறுப்பினராக உள்ள அவிநாசி (தனி) தொகுதி பாஜக-விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவே அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு முதன்மையான காரணமாகக் கூறப்படுகிறது. தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன், சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இது அதிமுக தலைமைக்கும் தனபாலுக்கும் இடையே ஒருவித இடைவெளியை ஏற்படுத்தியதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தனபால்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனபாலுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது, கட்சித் தலைமை அவரை முறையாகக் கவனிக்கவில்லை என அவரது குடும்பத்தினர் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 1977-ஆம் ஆண்டு முதல் இதுவரை 8 முறை சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். 1977, 1980, 1984 மற்றும் 2001-ல் சங்ககிரி தொகுதியிலும், 2011-ல் ராசிபுரத்திலும், 2016 மற்றும் 2021-ல் அவிநாசியிலும் வெற்றி பெற்றார். 1989-ஆம் ஆண்டு தேர்தலில் மட்டுமே அவர் தோல்வியைத் தழுவினார். மீதமுள்ள அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று 7 முறை எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றியுள்ளார்.

தனபால்

இன்று வெளியான 127 பேர் கொண்ட பட்டியலில் பி. தனபால் மட்டுமின்றி, முன்னாள் அமைச்சர்கள் சேவூர் எஸ். ராமச்சந்திரன் மற்றும் எம். பரஞ்சோதி ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேநேரம், 46 சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.