முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகனுக்கு அமைச்சரவையில் இடம்!

 
தனபால் லோகேஷ் தமிழ்செல்வன் தனபால் லோகேஷ் தமிழ்செல்வன்

அதிமுக ஆட்சி காலத்தில் சபாநாயகராகப் பணியாற்றிய மூத்த அரசியல் தலைவர் ப.தனபாலின் மகன் டி.லோகேஷ் தமிழ்செல்வனுக்கு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தவெக அமைச்சரவையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதிமுக-வின் மிக முக்கியத் தலைவர்களில் ஒருவராக வலம் வந்தவர் ப.தனபால். இவர் கடந்த 1977, 1980, 1984, 2001 ஆகிய ஆண்டுகளில் சங்ககிரி தொகுதியில் இருந்தும், 2011-ல் ராசிபுரம் மற்றும் 2016-ல் அவினாசி தொகுதியில் இருந்தும் எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். குறிப்பாக, 2001-ஆம் ஆண்டு ஜெயலலிதா அமைச்சரவையில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சராகவும், பின்னர் 2012 முதல் 2021 வரை இருமுறை தமிழகச் சட்டமன்ற சபாநாயகராகவும்  பதவி வகித்த பெருமைக்குரியவர்.

ஆனால், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமை ப.தனபாலுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, ப.தனபாலின் மகன் டி.லோகேஷ் தமிழ்செல்வன் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்குத் தவெக தலைமை உடனடியாக ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தது. தந்தையின் அரசியல் செல்வாக்கு மற்றும் தவெக அலையின் காரணமாக லோகேஷ் தமிழ்செல்வன் அந்தத் தொகுதியில் அமோக வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

கடந்த 2001-ல் தந்தை ப.தனபால் அமைச்சராக இருந்த நிலையில், தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகன் டி.லோகேஷ் தமிழ்செல்வனுக்கும் இன்று (மே 21, 2026) விரிவுபடுத்தப்படும் புதிய அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது. மக்கள் மாளிகை வெளியிட்டுள்ள 23 பேர் கொண்ட புதிய அமைச்சர்கள் பட்டியலில் லோகேஷ் தமிழ்செல்வத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளது.

அதிமுக-வின் மூத்த தலைவரின் வாரிசைத் தங்கள் பக்கம் இழுத்து, அவருக்கு அமைச்சரவையிலும் தவெக இடம் கொடுத்திருப்பது கொங்கு மண்டல அரசியல் வட்டாரத்தில் பெரும் உற்றுநோக்கலாக மாறியுள்ளது.