வங்காளதேசத்துக்கான புதிய இந்தியத் தூதராக முன்னாள் மத்திய மந்திரி நியமனம்!
வங்காளதேசத்துக்கான புதிய இந்தியத் தூதராக முன்னாள் மத்திய மந்திரி தினேஷ் திரிவேதி (75) நியமிக்கப்பட உள்ள தகவல், இந்திய இராஜதந்திர வட்டாரங்களில் ஒரு முக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
வழக்கமாக, தூதர் பதவிகளுக்கு இந்திய வெளியுறவுப் பணி அதிகாரிகளே நியமிக்கப்படுவார்கள். ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு வங்காளதேசம் போன்ற ஒரு முக்கிய அண்டை நாட்டுக்கு அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர் ஒருவரை இந்தியா நியமிக்கிறது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர், மன்மோகன் சிங் அமைச்சரவையில் ரயில்வே மந்திரி மற்றும் சுகாதாரத்துறை இணை மந்திரியாகப் பணியாற்றியவர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்பதால், வங்காளதேசத்துடனான கலாச்சாரம் மற்றும் மொழி (வங்காளி மொழியில் புலமை பெற்றவர்) ரீதியான நெருக்கம் இவருக்கு அதிகம். 2021-ல் திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
ஷேக் ஹசீனா ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு, வங்காளதேசத்தில் தாரிக் ரஹ்மான் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசுடன் இந்தியா தனது உறவை மீண்டும் சீரமைக்க விரும்புகிறது.

அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் எரிசக்தி தட்டுப்பாட்டைச் சமாளிக்க இந்தியாவின் உதவி அவர்களுக்குத் தேவைப்படுகிறது. இந்த இக்கட்டான நேரத்தில் திரிவேதியின் நிர்வாக அனுபவம் உதவும் என நம்பப்படுகிறது. இதுவரை வங்காளதேச தூதராக இருந்த பிரணய் வர்மா, தற்போது பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
