இனி பிரான்ஸ் செல்ல விசா தேவையில்லை... இந்தியர்களுக்கு அதிர்ஷ்டம்!
ஐரோப்பிய நாடான பிரான்ஸ் இந்தியப் பயணிகளுக்கு ஒரு மிகப்பெரிய சலுகையை அறிவித்து ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இனி இந்தியர்கள் பிரான்ஸ் நாட்டின் விமான நிலையங்கள் வழியாக மற்ற நாடுகளுக்குச் செல்லும்போது இடைக்கால விசா எனப்படும் 'டிரான்சிட் விசா' எடுக்க வேண்டிய அவசியமில்லை என அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோரிடையே நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தையின் பலனாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் பாரிஸ் போன்ற முக்கிய நகரங்களின் விமான நிலையங்கள் வழியாக அமெரிக்கா மற்றும் லண்டன் செல்லும் இந்தியர்கள் இனி எந்தவிதத் தடங்கலும் இன்றி தங்களது பயணத்தைத் தொடர முடியும். இது பயண நேரத்தைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல் விசாவுக்காகச் செலவிடப்படும் கூடுதல் தொகையையும் மிச்சப்படுத்தும் என்பதால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த புதிய விதியானது சாதாரண பாஸ்போர்ட் வைத்துள்ள அனைத்து இந்தியக் குடிமகன்களுக்கும் பொருந்தும் எனத் தூதரக அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்தியாவிற்கும் பிரான்ஸிற்கும் இடையிலான நட்புறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்த விசா தளர்வு பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பால் வரும் நாட்களில் பிரான்ஸ் வழியாகச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயரும் எனவும் இதனால் சர்வதேச விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் மாற்றம் ஏற்படும் எனவும் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
