"திருமணம் செய்துக் கொள்வதாக மோசடி... ரூ.9.35 கோடி ஏமாற்றிய பிரபல நடிகை அஷூ ரெட்டி மீது வழக்குப்பதிவு!

 
அஷூ ரெட்டி அஷூ ரெட்டி

சமூக வலைதளங்கள் மற்றும் திரையுலகில் பிரபலமான நடிகை அஷூ ரெட்டி, லண்டனில் பணியாற்றும் பொறியாளர் ஒருவரைத் திருமணம் செய்வதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்துள்ள புகார் தெலுங்குத் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை ஹைதராபாத் போலீசில் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் அஷூ ரெட்டி அந்த இளைஞரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவீட்டாருக்கும் தெரிந்தே இந்தத் தொடர்பு நீடித்ததாகத் தெரிகிறது. காதலிப்பதாகக் கூறி சொகுசு கார்கள், விலையுயர்ந்த நகைகள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக அந்த இளைஞரிடமிருந்து சுமார் ₹9.35 கோடி வரை அஷூ ரெட்டி பெற்றுள்ளதாகப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஷூ ரெட்டி

தற்போது திருமணத்தைப் பற்றிப் பேசும்போது, அஷூ ரெட்டி திருமணத்திற்கு மறுப்பு தெரிவிப்பதோடு, இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பொய் வழக்குப் போட்டு சிறைக்கு அனுப்புவேன் என மிரட்டுவதாகவும் இளைஞரின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் புகாரைத் தொடர்ந்து, நடிகை அஷூ ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மீது ஹைதராபாத் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  மோசடி செய்யப்பட்ட பணப் பரிமாற்றங்கள் தொடர்பான வங்கி ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் அஷூ ரெட்டியிடம் நேரில் விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

நடிகை அஷூ ரெட்டி

அஷூ ரெட்டி தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள இவர், அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக 'பிரண்ட் சாட்' செயலி மூலம் நடக்கும் சிறிய அளவிலான மோசடிகளைத் தாண்டி, தற்போது கோடிக்கணக்கில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் ஆன்லைன் மற்றும் நேரடி உறவுகளில் நிலவும் ஆபத்துகளைக் காட்டுகிறது.