லேப்டாப் வாடகை விடும் நிறுவனங்களை குறிவைத்து மோசடி.. விசாரணையில் அதிர்ச்சி..!!

 
தினேஷ்

சென்னையில் லேப்டாப்புகளை வாடகைக்கு விடும் நிறுவனங்களை குறிவைத்து மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் அபுசாலி தெருவை சேர்ந்த தொழிலதிபர் பிரேமலதா. Teachleaf systems pvt Ltd என்ற பெயரில் கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அனகாபுத்தூரில் தினேஷ் கம்யூனிகேஷன் என்ற நிறுவனத்தை நடத்துவதாக பூரி கடந்த ஆகஸ்ட் மாதம் 20 லேப்டாப்புகளை வாடகைக்கு தினேஷ் என்பவர் வாங்கிச் சென்றதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாடகை கொடுத்த காரணத்தினால் நம்பிக்கை ஏற்பட்டு அதிகளவு லேப்டாப்புகளை வாடகைக்கு கேட்கும் பொழுது சுமார் 496 லேப்டாப்புகளை வாடகைக்கு கொடுத்ததாக பிரேமலதா தெரிவித்துள்ளார்.

சும்மா 21 லட்ச ரூபாய் மாத வாடகைக்கு லேப்டாப்புகள் வாடகைக்கு கொடுக்கப்பட்ட நிலையில் ஒரு சில மாதங்கள் மட்டுமே வாடகை தந்ததாகவும் அதன் பிறகு வாடகை தரவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தினேஷிடம் கேட்டு வந்த நிலையில், பிரேமலதா நிறுவனத்திடம் வாடகைக்கு தினேஷ் வாங்கிய லேப்டாப்புகளே , தனது நிறுவனத்திற்கு விற்பனைக்கு வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பிறகு தினேஷிடம் தான் வாடகைக்கு கொடுத்த அனைத்து லேப்டாப்புகளையும் திருப்பி கேட்ட போது ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக பிரேமலதா புகாரில் தெரிவித்துள்ளார். மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள 496 லேப்டாப்புகளை மீட்டுத் தருமாறு தினேஷ் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் பிரேமலதா புகாரில் கோரயிருந்தார்.

இதையடுத்து விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தினேஷ் லேப்டாப்புகளை வாடகைக்கு எடுத்து 439 லேப்டாப்புகளை பல்வேறு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ததை உறுதி செய்தனர். கைது செய்யப்பட்ட தினேஷிடம் விசாரணை மேற்கொண்டதில் டிப்ளமோ மட்டும் படித்த தினேஷ் லேப்டாப்புகளை வாடகைக்கு எடுத்து கொடுப்பதும் மற்றும் பழுது பார்க்கும் வேலையையும் சிறு நிறுவனம் ஆரம்பித்து நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கிரெடிட் கார்டுகள் அதிகமாக வாங்கி லட்சக்கணக்கில் கடன் ஆன காரணத்தினால் கட்ட முடியாமல் தினேஷ் திணறியதாகவும் அதனை அடைக்க மற்றொரு கிரெடிட் கார்டை வங்கியில் இருந்து வாங்கி மேலும் இரு மடங்கு கடனாளியாக மாறியதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் வாடகைக்கு எடுக்கும் லேப்டாப்புகளை ஒன்றை விட்டு வட்டியை கட்டியதாகவும் தெரிவித்துள்ளார். மொத்தமாக உள்ள கடன்களை அடைப்பதற்கு வாடகைக்கு எடுத்த லேப்டாப்புகளை எல்லாம் விற்பனை செய்து வரும் தொகையில் கடனை அடைத்து விட்டு சொகுசாக வாழலாம் என எண்ணியுள்ளார். வாடகைக்கு எடுத்த நிறுவனத்திடம் குறைந்த அளவு வாடகை மட்டும் செலுத்தி விட்டு நீண்ட காலம் தப்பித்து இருக்கலாம் என திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தான் போலீசார் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சேலையூரில் மற்றொரு லேப்டாப் வாடகைக்கு விடும் நிறுவனத்திடம் இருந்து 700 லேப்டாப்புகளை வாங்கி விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. அடுத்தடுத்து தினேஷ் மீது லேப்டாப்புகளை வாடகைக்கு கொடுத்த நிறுவனங்கள் புகார் அளிக்கப்பட்டது வெட்ட வெளிச்சமானது. குறிப்பாக இவ்வாறு பல்வேறு நிறுவனங்களிடம் லேப்டாப்புகளை வாடகைக்கு எடுத்து அதை குறைந்த விலைக்கு விற்பனை செய்து அதில் வரும் பணத்தை சுழற்சி முறையில் வாடகைக்கு கொடுத்து தொடர்ந்து தப்பித்து வரலாம் என எண்ணியதாக தினேஷ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். வாடகை கொடுத்து விட்டால் லேப்டாப்புகளை கொடுத்த நிறுவனங்கள் எந்தவித கேள்வியும் கேட்காமல் இருப்பார்கள் என நினைத்ததாகவும் ஆனால் தான் மாட்டிக் கொண்டதாகவும் போலீசாரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரணையில் இதுவரை 1500 க்கும் மேற்பட்ட லேப்டாப்புகளை வாடகைக்கு எடுத்து விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது

இவ்வாறாக சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழவும் கார் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் என உல்லாசமாக வாழ்ந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பிரேமலதாவிடம் இருந்து தினேஷ் வாங்கிய லேப்டாப்புகளில் 312 லேப்டாப்புகளை போலீசார் மீட்டுள்ளனர். மோசடி பணத்தில் வாங்கிய கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணைக்குப் பிறகு தினேஷை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தினேஷை காவலில் எடுத்து இதேபோன்று சென்னையில் லேப்டாப்புகளை வாடகைக்கு எடுத்து எத்தனை நிறுவனங்களை ஏமாற்றியுள்ளார் எவ்வளவு லேப்டாப்புகளை விற்பனை செய்துள்ளார் என்பது குறித்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

From around the web