ஐ.பி.எல். ரசிகர்களுக்கு டபுள் ஜாக்பாட் - மெட்ரோவில் இலவசப் பயணம்; நள்ளிரவு 1 மணி வரை ரயில் சேவை!

 
மெட்ரோ ஐபிஎல் மெட்ரோ ஐபிஎல்

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சிஎஸ்கே - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். போட்டியை முன்னிட்டு, கிரிக்கெட் ரசிகர்களுக்குச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், ரசிகர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பவும் இந்தச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று நடைபெறவுள்ள போட்டிக்கான நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் ரசிகர்கள், மெட்ரோ ரயிலில் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாகப் பயணிக்கலாம். நுழைவுச் சீட்டில் உள்ள கியூ.ஆர் குறியீட்டை மெட்ரோ நிலையங்களின் நுழைவு வாயில்களில் உள்ள ஸ்கேனர்களில் காண்பித்து, இரண்டு முறை (செல்ல மற்றும் திரும்ப) இலவசமாகப் பயணம் செய்யலாம். இதன் மூலம் ரசிகர்கள் டிக்கெட் எடுப்பதற்காக வரிசையில் நிற்கும் நேரமும், கூடுதல் செலவும் மிச்சமாகிறது.

ஐபிஎல்

போட்டி இரவு 11 மணி கடந்து முடிவடையும் என்பதால், ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து விம்கோ நகர் மற்றும் விமான நிலைய மெட்ரோ நிலையங்களுக்குச் செல்லும் கடைசி ரயில் நள்ளிரவு 1 மணிக்கு புறப்படும். இதனால் ரசிகர்கள் அவசரமின்றி மைதானத்திலிருந்து வெளியேறி, பாதுகாப்பாகத் தங்களது ஊர்களுக்குத் திரும்ப முடியும்.

ரசிகர்கள் கூட்டத்தைக் கையாளவும், நுழைவு வாயில்களில் உதவவும் அரசினர் தோட்டம் மற்றும் சென்ட்ரல் மெட்ரோ நிலையங்களில் கூடுதல் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎல்

சேப்பாக்கம் மைதானத்திற்குச் செல்ல விரும்பும் ரசிகர்கள், அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்தில் இறங்கிச் செல்வது எளிதாக இருக்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தச் சலுகை சென்னை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.