கட்டணக் கழிப்பறைகளில் ரூ.10 வசூல்... கதறும் பொதுமக்கள்!
தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, திருப்பூர், தேனி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி கட்டணக் கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி அங்குள்ள ஊழியர்கள் பொதுமக்களிடம் இருந்து முறைகேடாக ரூ.10 வரை கட்டாயப்படுத்தி வசூல் செய்து வருகின்றனர். இந்தத் தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதக் கட்டண உயர்வாலும் அதிகப்படியான வசூலாலும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
முன்பெல்லாம் சிறுநீர் கழிக்கப் பொதுமக்களிடம் இருந்து ரூ.5 மட்டுமே கட்டணமாகப் பெறப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கட்டணக் கழிப்பறை வளாகத்திற்குள் நுழைந்தாலே கட்டாயமாக ரூ.10 தர வேண்டும் என ஊழியர்கள் கறாராகப் பேசிப் பணத்தைப் பிடுங்குகின்றனர். பணத்தைக் கொடுக்க மறுக்கும் பயணிகளிடம் அங்கிருக்கும் ஊழியர்கள் தேவையின்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டு மரியாதையின்றி நடந்து கொள்கின்றனர்.
ஏழை எளிய மக்களையும் தினசரிப் பயணிகளையும் கடுமையாகப் பாதிக்கும் இந்தச் செயல் பேருந்து நிலையங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையைப் பயன்படுத்தி இதுபோன்ற அநியாயக் கட்டண வசூலில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்துக் கழிப்பறைகளின் முகப்பிலும் அரசு நிர்ணயித்த முறையான கட்டண விவரப் பலகையைத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் வைக்க வேண்டும். அரசு விதிமுறைகளை மீறிக் கூடுதல் கட்டணம் பிடுங்கும் ஊழியர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
