கருப்பை வாய் புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி - 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு இலவசத் தடுப்பூசி – கர்நாடக அரசு அதிரடி!
இந்தியப் பெண்களிடையே மரணத்தை ஏற்படுத்தும் மிக முக்கியப் புற்றுநோய்களில் ஒன்றான கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில், கர்நாடக மாநில அரசு வரலாற்றுச் சிறப்புமிக்கப் புதிய சுகாதாரத் திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.
பெண்களை அதிகம் தாக்கும் இந்த ஆபத்தான புற்றுநோயை ஆரம்பத்திலேயே தடுக்கும் ஆற்றல் மருத்துவத் தடுப்பூசிகளுக்கு உண்டு. பொதுவாக, 9 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு இந்தத் தடுப்பூசியைச் செலுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் அவர்களுக்குக் கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை 100 சதவீதம் தடுக்க முடியும் என மருத்துவ வல்லுநர்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, கர்நாடக மாநிலத்தில் உள்ள 14 வயதுடைய அனைத்துச் சிறுமிகளுக்கும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசியை முற்றிலும் இலவசமாக வழங்க அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் பல்லாயிரக்கணக்கில் செலவாகும் 'கார்டாசில்-4' என்ற அதிநவீன தடுப்பூசி, தற்போது அரசு சார்பில் சிறுமிகளுக்குப் பைசா செலவின்றி இலவசமாகப் போடப்படுகிறது. இந்தத் தடுப்பூசி ஆறு மாத கால இடைவெளியில், இரண்டு தவணைகளாகச் சிறுமிகளுக்குச் செலுத்தப்படும்.
பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசியைச் செலுத்த இந்த எளிய வழிமுறைகளைப் பயன்படுத்தலாம்: மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் (uwin.mohfw.gov.in) அல்லது அதற்கான பிரத்யேக செயலியைப் பயன்படுத்தி எளிதாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
எவ்வித முன்பதிவும் இன்றி, அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு நேரடியாகச் சென்றும் இந்த இலவசத் தடுப்பூசிச் சேவையைப் பெற்றுக் கொள்ளலாம். பெண் குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்திற்கு அரசு வழங்கும் மிகச்சிறந்த பாதுகாப்பு கவசமாக இத்திட்டம் பார்க்கப்படுகிறது.
