ஜார்க்கண்டில் கார் மீது மோதிய சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து... நூலிழையில் உயிர் தப்பிய ஓட்டுநர்!

 
ஜார்கண்ட் ஜார்கண்ட்

ஜார்க்கண்ட் மாநிலம் போகோரோ மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில்வே கடவுப்பாதையில் (Level Crossing), நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயில் ஒன்று கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் தாக்கத்தால் சரக்கு ரயிலின் ஒரு பெட்டி தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக, காரில் இருந்த ஓட்டுநர் சரியான நேரத்தில் வெளியே குதித்ததால் எவ்வித உயிர்ச் சேதமுமின்றி உயிர் தப்பினார்.

இந்த விபத்து போகோரோ அனல் மின் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் நேற்று (2026 ஏப்ரல் 19) காலை நடைபெற்றது. மின் நிலையத்தில் நிலக்கரியை இறக்கிவிட்டு பின்னோக்கி வந்த சரக்கு ரயில், அங்கிருந்த கேட்டை உடைத்துக் கொண்டு பாதையைக் கடக்க முயன்ற கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த கார் சுமார் 200 முதல் 500 மீட்டர் தூரம் வரை ரயிலால் இழுத்துச் செல்லப்பட்டு உருக்குலைந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தன்பாத் ரயில்வே கோட்ட மேலாளர் அகிலேஷ் மிஸ்ரா தலைமையிலான அதிகாரிகள் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். ரயில்வே கேட் திறந்திருந்ததா அல்லது சிக்னல் குறைபாடா என்பது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்தின் போது ரயில் ஓட்டுநர் உரிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றினாரா என்பது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.