பிரெஞ்சு பெண்ணை சீரழித்த இருவருக்கு மரண தண்டனை... பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 
பாகிஸ்தான் பாகிஸ்தான்

 

பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகருக்கு அருகே உள்ள நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு ஒரு பிரெஞ்சு நாட்டு பெண் தன் குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் எரிபொருள் தீர்ந்துவிட்டதால் அவர் சாலையோரம் நின்றார். அந்த நேரத்தில் அங்கு வந்த இருவர் காரின் கண்ணாடியை உடைத்து, அந்த பெண்ணை வெளியே இழுத்து அவரின் குழந்தைகள் முன்னிலையிலேயே பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும் அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகளையும் திருடிச் சென்றனர்.

இந்த கொடூரமான சம்பவம் பாகிஸ்தான் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரி நாடு முழுவதும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி, குற்ற இடத்தில் கிடைத்த ஆதாரங்கள் மற்றும் கைபேசி தரவுகளின் அடிப்படையில் அபித் மல்ஹி, ஷப்காத் அலி ஆகிய இருவரை கைது செய்தனர்.

இந்த வழக்கினை லாகூரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி அர்ஷத் உசேன் பட்டா தீர்ப்பு வழங்கினார். குற்றம் நிரூபிக்கப்பட்ட அபித் मல்ஹி மற்றும் ஷப்காத் அலி ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவர்களுக்கு தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.