உயர்மின் அழுத்தம் காரணமாக வெடித்து சிதறிய ஃப்ரிட்ஜ், ஏசி... 10-க்கும் மேற்பட்ட வீடுகள் நாசம்.. பொதுமக்கள் வேதனை!

 
மின் மின்

ஈரோடு மாவட்டத்தில் நிலவி வரும் கடுமையான கோடை வெயிலுக்கு நடுவே, மின்வாரியத்தின் அலட்சியத்தால் நள்ளிரவைக் கடந்த அதிகாலை வேளையில் பொதுமக்களின் வீடுகளில் இருந்த அத்தியாவசிய மின் சாதனங்கள் அனைத்தும் திடீரென வெடித்துச் சிதறியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சிக்கு உட்பட்ட  குடியிருப்புப் பகுதிகளில் இன்று அதிகாலை நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். அதிகாலை சுமார் 4 மணி அளவில், மின் விநியோகப் பாதையில் ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அப்பகுதி வீடுகளுக்குச் செல்லும் மின்சாரத்தில் உயர்மின் அழுத்தம் பாய்ந்துள்ளது.

இந்தத் திடீர் வோல்டேஜ் ஏற்ற இறக்கத்தைத் தாங்க முடியாமல், பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் ஓடிக்கொண்டிருந்த ஃபேன், ஏசி மற்றும் சமையலறையில் இருந்த ஃப்ரிட்ஜ், மிக்ஸி, தொலைக்காட்சிப் பெட்டிகள் என அனைத்து மின் சாதனங்களும் திடீரென பயங்கரச் சத்தத்துடன் அடுத்தடுத்து வெடித்துச் சிதறி, கருகிப் புகையத் தொடங்கின.

மின் சாதனங்கள் வெடித்த சத்தத்தைக் கேட்டு வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு, குழந்தைகளுடன் வீட்டை விட்டு வீதிக்கு ஓடி வந்தனர். நல்வாய்ப்பாக இந்த மின் விபத்தில் யாருக்கும் எவ்வித உடல் காயம் அல்லது உயிர்ச் சேதம் ஏற்படவில்லை என்றாலும், நடுத்தர மக்களின் வீடுகளில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் முற்றிலுமாகச் சேதமடைந்து சாம்பலாகின. கோடை வெயில் கொளுத்தும் இந்தச் சூழலில், ஃபேன், ஏசி, ஃப்ரிட்ஜ் என அனைத்தும் பழுதாகியுள்ளதால் பொதுமக்கள் தற்போது சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள், உடனடியாக அந்தப் பகுதிக்கான மின் இணைப்பைத் துண்டித்து விட்டுப் பழுதுபார்க்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து குறித்துப் பாதிக்கப்பட்ட பவானி பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகையில், "மின்வாரியத்தின் முறையான பராமரிப்பு இல்லாததே இந்த உயர்மின் அழுத்தத்திற்கு முக்கியக் காரணம். எனவே, மின்வாரியம் உடனடியாகத் தங்களது தவறை ஏற்றுக்கொண்டு, எங்கள் வீடுகளில் சேதமடைந்துள்ள அனைத்து மின் சாதனங்களுக்கும் உரிய முழு இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும்," எனத் தமிழக அரசுக்கும் மின்வாரியத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.