“ஃப்ரிட்ஜ் வெடித்து பயங்கர தீ விபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாப பலி”

 
ஃபிரிட்ஜ்

 

கர்நாடக மாநிலம் பெலகாவியில் வீட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெலகாவி நகரின் சாவத் கல்லி பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்ததைத் தொடர்ந்து தீப்பிடித்து, சில நிமிடங்களில் வீடு முழுவதும் தீ பரவியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

இந்த தீ விபத்தில் கஜானன் தமோனே (65), ரோஷன் தமோனே (21), சாரதா தமோனே (45), பாரதி தமோனே (50) ஆகிய 4 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.தீயில் சிக்கி பிரியா தமோனே (28), கங்கா தமோனே (25) ஆகிய இருவரும் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரிட்ஜ் வெடித்ததால் தீ விபத்தா?

வீட்டில் இருந்த பிரிட்ஜில் ஏற்பட்ட கோளாறு அல்லது மின்சார பிரச்னை காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பிரிட்ஜ் வெடித்ததற்கான சரியான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.சம்பவம் குறித்து பெலகாவி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தடயங்கள் மற்றும் மின்சார அமைப்புகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த பின்னரே விபத்துக்கான முழுமையான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.