FRIENDSHIP DAY | நட்பை BEST ஆகப் பேசும் தமிழ் படங்கள்!
மனித வாழ்க்கையின் மிகவும் உன்னதமான, அன்பின் எல்லையற்ற நீட்சியாக விளங்குவது நட்பு. அந்தச் சிறப்புமிக்க நட்பைக் கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தச் சிறப்பு நாளில், உங்கள் நண்பர்களுடன் ஒன்றாக இணைந்து வீட்டில் அமர்ந்து பார்க்கக்கூடிய, யூ-ட்யூப்களில், ஓடிடி தளங்களில் கிடைக்கக்கூடிய சில சிறந்த திரைப்படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.
தற்போதைய தமிழக முதல்வர் விஜய் நடித்திருக்கும் நண்பன். பாலிவுட்டின் '3 இடியட்ஸ்' படத்தின் தமிழ் ஆக்கம். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்த இத்திரைப்படம், கல்லூரி கலாட்டாக்களைக் கண்முன் நிறுத்துவதுடன் தற்போதைய கல்வி முறையையும் ஆக்கப்பூர்வமாகச் சாடியிருக்கும்.
உள்ளம் கேட்குமே: கல்லூரியில் ஒன்றாகப் படித்த ஐந்து நண்பர்கள் மீண்டும் சந்திக்கையில் பழைய நினைவுகளை அசைபோடும் உணர்ச்சிபூர்வமான திரைப்படம்.
ஏப்ரல் மாதத்தில்: சினேகா - ஸ்ரீகாந்த் இடையிலான காதலைத் தாண்டி, நண்பர்கள் கூட்டத்தின் பிரிவை 'மனசே மனசே' பாடல் வழியே அழகாகக் காட்டிய படம்.

காதல் தேசம்: 'முஸ்தபா முஸ்தபா' என்ற எவர்கிரீன் நட்புப் பாடல் இடம்பெற்ற படம். இரண்டு வெவ்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த நண்பர்களின் ஆழமான நட்பைப் பேசும் கிளாசிக் திரைப்படம்.
இனிது இனிது: தெலுங்கின் 'ஹேப்பி டேஸ்' ரீமேக். கல்லூரி சேர்க்கை முதல் படிப்பு முடிக்கும் வரை நண்பர்களின் நட்பு, காதல், கலாட்டாக்களை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கும்.
கல்லூரி: கிராமப்புற மாணவர்களின் கல்லூரி வாழ்க்கையையும், அவர்களின் நிஜமான பாசத்தையும் பிரதிபலிக்கும் திரைப்படம்.
தளபதி : மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் - மம்மூட்டி நடித்த காவியத் திரைப்படம். மகாபாரதத்தின் கர்ணன் - துரியோதனன் நட்பை மையமாகக் கொண்டு செதுக்கப்பட்ட பிளாக்பஸ்டர் ஹிட்.

சுப்பிரமணியபுரம் மற்றும் நாடோடிகள் : சசிகுமார் - சமுத்திரக்கனி கூட்டணியில் உருவாகி, நண்பர்களுக்காக எதையும் செய்யத் துணியும் தியாகத்தையும், அதேவேளையில் நட்பின் தீவிரத்தையும் காட்டிய வெற்றிப் படங்கள்.
ஓ மை கடவுளே: சிறுவயது முதல் நண்பர்களாக இருக்கும் ஆண்-பெண் திருமணப் பந்தத்தில் இணையும் போது ஏற்படும் சூழல்களைப் பேசும் நவீன கால ஃபீல்-குட் திரைப்படம்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்: துல்கர் சல்மான் மற்றும் ரக்ஷன் இடையேயான நகைச்சுவை மற்றும் காம்போ காட்சியமைப்புகள் நண்பர்களுடன் ஜாலியாகப் பார்க்க ஏற்ற சிறந்த க்ரைம்-காமெடி த்ரில்லர்.
பெங்களூர் டேஸ்: மலையாளத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் (தமிழிலும் 'பெங்களூரு நாட்கள்' என வந்தது). உறவினர்களாகவும், சிறந்த நண்பர்களாகவும் இருக்கும் மூவரின் கனவு மற்றும் லூட்டிகளைப் பேசும் அழகான திரைப்படம்.
