சினிமாவில் இருந்து அரியணை வரை.. முதல்வர் விஜய்க்கு தமிழ் திரையுலகம் சார்பில் பிரம்மாண்ட பாராட்டு விழா; தயாரிப்பாளர்கள் திட்டம்!

 
விஜய் உற்சாகம் மகிழ்ச்சி

அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு, தமிழ்த் திரைப்படத் துறை சார்பில் பிரம்மாண்டமான பாராட்டு விழா ஒன்றை நடத்தத் திரை உலக அமைப்புகள் தீவிரமாகத் திட்டமிட்டு வருகின்றன.

திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக விளங்கிய விஜய், கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

தேர்தல் களம் கண்ட தவெக, தமிழக சட்டமன்றத் தேர்தலில் பலத்த போட்டிகளுக்கு இடையே 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாரம்பரியமிக்கக் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவிற்குப் பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், தவெக கூட்டணி 34.92 சதவீத வாக்குகளை அள்ளி சாதனை படைத்தது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, கடந்த மே 10-ஆம் தேதி தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக விஜய் முறைப்படி பதவியேற்றார். இதற்கிடையே, தவெக-வின் உட்கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டு, தற்பொழுது கட்சியின் மொத்த உறுப்பினர் சேர்க்கை 2 கோடியைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

தங்களது திரையுலகைச் சேர்ந்த ஒரு சமகாலத் கலைஞர், மக்கள் ஆதரவோடு மாநிலத்தின் மிக உயரிய முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பதை கௌரவிக்கும் வகையில் இப்பாராட்டு விழா ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.

விஜய்

இந்த விழாவுக்கான முதற்கட்டப் பணிகளைத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட முக்கிய அமைப்புகள் இணைந்து தொடங்கியுள்ளன. இதற்காகத் தவெக தலைவர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து முறைப்படி அனுமதி பெறத் திரைப்பட சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

தலைமைச் செயலகத்தின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில், சென்னையில் மிக பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட உள்ள இந்த பாராட்டு விழாவில் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தித் திரையுலகைச் சேர்ந்த இந்திய அளவிலான முன்னணி நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக அரசின் ஒரு மாத கால நிர்வாகப் பூர்த்தி மற்றும் சமீபத்திய அரசியல் விவாதங்களுக்கு இடையே, தமிழ் சினிமாத்துறை எடுக்கவுள்ள இந்த அடுத்தகட்ட நடவடிக்கை கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.