மே 4 முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம் - 110 டிகிரி வரை வெயில் அடிக்க வாய்ப்பு! தப்பிக்க உதவுமா கோடை மழை?!
தமிழகத்தில் கோடைக்காலத்தின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் வரும் திங்கட்கிழமை (மே 4) தொடங்கி, மே 28-ஆம் தேதி வரை நீடிக்க உள்ளது. இந்த 25 நாட்களும் சூரியனின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் இப்போதே தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
இந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெப்பநிலையானது இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக உள் மாவட்டங்களில் வெயில் 110 டிகிரி பாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார். கடல் காற்று தரைப்பகுதிக்குள் நுழைய தாமதமாகும் என்பதால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் புழுக்கம் அதிகமாக இருக்கும்.

வெயிலின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இந்த ஆண்டு மே மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள்: நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். வழக்கமாக மே மாதத்தில் பெய்யும் சராசரி மழையை விட, இந்த ஆண்டு கூடுதல் மழை பதிவாக வாய்ப்புள்ளதால் கத்தரி வெயிலின் உக்கிரம் சற்று குறையக்கூடும் எனத் தெரிகிறது.

வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் கூறுகையில், "அக்னி நட்சத்திர காலத்தில் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். போதுமான அளவு தண்ணீர், இளநீர் மற்றும் பழச்சாறுகளை உட்கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.
