இனி பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் வட்டியில்லா வீட்டுக் கடன்... பிரான்ஸ் செனட் சபை ஒப்புதல்!
பிரான்ஸில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும், இளம் குடும்பங்கள் சொந்த வீடு வாங்க உதவவும் வட்டியில்லா வீட்டுக் கடன் திட்டத்தை விரிவுபடுத்தும் திருத்தத்திற்கு அந்நாட்டு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், வசதியான குடும்பங்களும் இச்சலுகையைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறி பிரான்ஸ் அரசாங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
2027-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது, வட்டியில்லா வீட்டுக் கடன் திட்டமான ‘பி.டி.இசட்’ திட்டத்தை விரிவுபடுத்தும் திருத்தம் செனட் சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன்படி, இனி ஒவ்வொரு புதிய குழந்தை பிறக்கும்போதும் அந்தக் குடும்பங்கள் வட்டியில்லா வீட்டுக் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே குழந்தையை எதிர்பார்த்திருக்கும் குடும்பங்களுக்கும், 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பராமரிக்கும் பெற்றோருக்கும் இந்தச் சலுகை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

வீட்டு விலையும் வாடகையும் அதிகமாக உள்ள பெரிய நகரங்களில் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பழைய வீடுகளை வாங்குவதற்கும் வட்டியில்லா வீட்டுக் கடன் வழங்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டில் பிரான்ஸில் 6 லட்சத்து 45 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளனர். இது 2024-ஆம் ஆண்டை விட 2.1 சதவீதம் குறைவாகும். மேலும், 2010-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது பிறப்பு விகிதம் 24 சதவீதம் வரை சரிந்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டில் 44 ஆயிரமாக இருந்த வட்டியில்லா வீட்டுக் கடன் பயனாளிகளின் எண்ணிக்கை, 2025-ஆம் ஆண்டில் 73 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு குழந்தை பிறப்புக்கும் வட்டியில்லா கடன் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள மந்திரி டேவிட் அமியல், "இந்தத் திட்டத்தால் அதிக வருமானம் கொண்ட வசதியான குடும்பங்களும் அரசு சலுகையைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது" என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செனட் சபையின் இந்த முடிவுகள் இறுதி வடிவம் பெற்றுச் சட்டமாக நிறைவேற்றப்பட்ட பின்னரே பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
