திருச்செந்தூர் முதல் கந்தகோட்டம் வரை... இன்று முருகர் திருக்கல்யாண உற்சவம்!
இன்று முருகனின் அறுபடை வீடுகள் உட்பட பிற முக்கிய ஆலயங்களிலும் முருகன் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. ஐப்பசி மாத கந்தசஷ்டி விரதத்தின் உச்சநிகழ்வாகிய சூரசம்ஹாரம் வடபழனி, பாரிமுனை கந்தகோட்டம், திருச்செந்தூர், வல்லக்கோட்டை என பல முருகன் கோவில்களில் நேற்று மாலை நடைபெற்று முடிந்த நிலையில், இன்று முருகர் ஆலயங்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
‘தமிழ் கடவுள்’ எனப் போற்றப்படும் முருகப்பெருமான், அசுரன் சூரபத்மனை வதம் செய்த நாள், தர்மம் வெற்றி பெற்று தீமை ஒழிந்த தினமாக கருதப்படுகிறது. தீபாவளிக்குப் பின் அமாவாசை பிரதமையிலிருந்து சஷ்டி வரை ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படும் கந்தசஷ்டி விரதத்தின் நிறைவு நாளாக சூரசம்ஹாரம் கொண்டாடப்படுகிறது. நேற்று சூர பத்மனை முருகன் சிக்கலில் அன்னையிடம் இருந்து வேல் வாங்கி, திருச்செந்தூரில் வதம் செய்தார்.

இந்நிலையில் இன்று திருக்கல்யாணத்தையொட்டி சென்னையின் முக்கிய முருகன் திருத்தலங்களான வடபழனி முருகன் கோவில், பாரிமுனை கந்தகோட்டம் கந்தசாமி கோவில், குன்றத்தூர் சுப்பிரமணிய சாமி கோவில், வல்லக்கோட்டை முருகன் கோவில், திருப்போரூர் சுப்ரமணிய சாமி கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இணைந்துள்ள முருக சந்நிதிகளில் இன்று மாலை திருக்கல்யாண வைபவம் நடத்தப்படுகிறது.

இன்று மாலை முருகன், தெய்வானை வள்ளி திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா நிறைவடையும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
