செயற்கை பனீருக்கு நாடு முழுவதும் தடை? FSSAI அதிரடி முடிவு... புதிய விதிமுறை வெளியீடு!

 
panneer

 

பனீர் வாங்கி சாப்பிடும் பொதுமக்களுக்கு முக்கியமான மாற்றத்தை கொண்டு வரும் வகையில், பாலில் இருந்து தயாரிக்கப்படாத செயற்கை பனீரை “பனீர்” என்ற பெயரில் விற்பனை செய்வதை கட்டுப்படுத்த உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) புதிய வரைவு விதிமுறையை முன்மொழிந்துள்ளது.பாலில் இருந்து பெறப்படும் பொருட்களுக்கு பதிலாக தாவர எண்ணெய், கொழுப்பு, தாவர புரதம் உள்ளிட்ட பாலில் இருந்து பெறப்படாத மூலப்பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்கள் “Analogue Dairy Products” என குறிப்பிடப்படுகின்றன. இவை உண்மையான பனீரைப் போல தோற்றம் மற்றும் தன்மையுடன் இருக்கலாம்.

இத்தகைய பொருட்கள் உண்மையான பனீர் என்று நுகர்வோர் தவறாக புரிந்துகொள்ளும் வாய்ப்பு இருப்பதால், அவற்றின் பெயர் மற்றும் லேபிளிங் தொடர்பாக கட்டுப்பாடுகளை கொண்டுவர FSSAI நடவடிக்கை எடுத்துள்ளது.

FSSAI வெளியிட்டுள்ள வரைவு விதிமுறையில், பாலில் இருந்து பெறப்படாத மூலப்பொருட்களால் தயாரிக்கப்படும் பொருளை “Paneer” என்ற பெயரில் குறிப்பிடுவதை கட்டுப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. ஏற்கனவே “Analogue in Dairy Context” பிரிவில் உரிமம் அல்லது பதிவு பெற்றுள்ள தயாரிப்புகளும் தங்களது பெயர், லேபிள் மற்றும் விளம்பரங்களில் “Paneer” என்ற வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை உடனடியாக நாடு முழுவதும் அமலுக்கு வந்த தடை அல்ல. FSSAI தற்போது வரைவு விதிமுறையை வெளியிட்டு, பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினரிடம் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை கோரியுள்ளது. இதற்காக 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

FSSAI Proposes Ban On Selling Non-Milk Products As Paneer; Draft Rules Seek Clear Labelling

இதற்கிடையே, செயற்கை அல்லது analogue பனீருக்கு எதிராக சில மாநிலங்கள் ஏற்கனவே தனிப்பட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளன. மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற பொருட்களின் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.FSSAI-ன் புதிய முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், பாலில் இருந்து தயாரிக்கப்படாத analogue பொருட்களை “பனீர்” என்ற பெயரில் சந்தைப்படுத்துவதில் பெரிய மாற்றம் ஏற்படும். இதன் மூலம் ஒரு பொருள் உண்மையில் பாலில் இருந்து தயாரிக்கப்பட்டதா என்பதை நுகர்வோர் தெளிவாக அறிந்துகொள்ளும் வகையில் லேபிளிங் நடைமுறைகள் மேலும் கடுமையாகலாம்.