நெஸ்லே குழந்தைகள் உணவுப் பொருட்கள் மீது வழக்குப்பதிவு - FSSAI அதிரடி நடவடிக்கை.. பெற்றோர்களே உஷார்!
பிரபல பன்னாட்டு நிறுவனமான நெஸ்லேவின் தயாரிப்பான குழந்தைகள் உணவுப் பொருட்கள் மற்றும் பவுடர்களில் விதிகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தரப்பில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்புகளான 'நான் எக்செல்லா புரோ' மற்றும் 'லாக்டோஜென் புரோ' ஆகிய குழந்தைகள் உணவுப் பொருட்களின் விளம்பரங்களில் விதிமுறைகளுக்கு மாறான தகவல்கள் இடம்பெற்றதாகக் கூறி இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்நிறுவனத்தின் 'பாலோ அப் பார்முலா' பவுடரில் அவசியமான வைட்டமின் பி7 (பயோட்டின்) சத்து நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடக் குறைவாக இருந்ததாகக் கூறி மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக மூன்று வழக்குகள் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. அமைப்பால் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் குறித்து நெஸ்லே நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாவது; தங்களது தயாரிப்புகளும் அவற்றின் லேபிள்களும் ஏற்கனவே உரிய முறையில் அங்கீகரிக்கப்பட்டவை என்றும், அனைத்து விதிகளுக்கும் உட்பட்டே அவை சந்தைப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
