எரிபொருள் தட்டுப்பாடு... நாளை முதல் வாரத்திற்கு 2 நாட்கள் லீவு - பெட்ரோல் வாகனங்களை மாற்றவும் நேபாள் அரசு உத்தரவு!
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் மேற்காசியாவில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இதன் எதிரொலியாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, நேபாளத்தில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்க நேபாளப் பிரதமர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை: எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில், இனி வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்கள் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய விடுமுறை நடைமுறை நாளை முதல் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். விடுமுறை நாட்களைச் ஈடுகட்டும் வகையில், மற்ற வேலை நாட்களில் அரசு அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு நிரந்தரத் தீர்வாக, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றுவதற்கான சட்ட கட்டமைப்புகளை உருவாக்கவும், அதற்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இறக்குமதி செய்யப்படும் எரிபொருளின் மீதான சார்பு நிலையைக் குறைக்க நேபாள அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதோடு, விநியோகச் சங்கிலியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேபாளம் தனது எரிபொருள் தேவைக்கு முழுமையாக இறக்குமதியை நம்பி இருப்பதால், இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
