என்ன கொடுமை சரவணன் இது... வீடியோ காலில் தந்தையின் இறுதிச் சடங்கு செய்த 3 மகள்கள்... அதிர்ச்சி வீடியோ!
ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தந்தையின் இறுதிச்சடங்கில் நேரில் பங்கேற்காத 3 மகள்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த முன்னாள் ஜவுளி வியாபாரியான 74 வயது ஷிவ்சரண் ராம் ரத்தன் குப்தா குடும்பத்தினரின் அரவணைப்பு இல்லாமல் முதியோர் இல்லத்தில் தங்கி வாழ்ந்து வந்தார். உடல்நிலை மோசம் அடைந்தது குறித்து பலமுறை தகவல் தெரிவித்தும் அவரது மகள்களான அனிதா, நிஷா மற்றும் பிரியா ஆகியோர் நேரில் வரவில்லை.
வயது முதிர்வு மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் உயிரிழந்ததை அடுத்து முதியோர் இல்ல நிர்வாகம் அவரது மகள்களுக்கு மீண்டும் தகவல் தெரிவித்தது. நேபாளம், உத்தரப் பிரதேசம் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் வசித்து வந்த அவர்களால் நேரில் வர முடியாது என்று கூறிவிட்டதால் இறுதி நிகழ்வுகளை வீடியோ கால் மூலம் பார்த்தனர். குடும்பத்தினரின் ஒப்புதலுடன் அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டதுடன் முதியோர் இல்ல நிர்வாகத்தினரே அனைத்து இறுதிச்சடங்கு ஏற்பாடுகளையும் செய்து தகனம் செய்தனர்.
இறுதிச்சடங்கு செலவுக்காக மூத்த மகள் அனிதா ஆன்லைன் மூலம் ரூ 5,100 அனுப்பியதுடன் தந்தையின் அஸ்தியைக் கங்கை நதியில் கரைக்குமாறு ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டனர். பெற்றோரின் இறுதிக்கடமைகளில் பிள்ளைகள் நேரில் பங்கு பெறாத இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு பல்வேறு தரப்பினரிடையே கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
