விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: சத்தான, சுவையான 'ராகி செவ்வாழை கொழுக்கட்டை' செய்முறை!

 
விநாயகர் சதுர்த்தி ராகி செவ்வாழை கொழுக்கட்டை

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த ராகி செவ்வாழை கொழுக்கட்டை செய்வது எப்படி என்று எளிமையான ரெசிப்பியைப் பார்க்கலாம். குழந்தைகள் சாதாரண கொழுக்கட்டையை விட  இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு அதிக சத்து தருகிற பலகாரமாகவும் இருக்கும். விநாயகர் சதுர்த்தி என்றில்லாமல் மாலை சிற்றுண்டியாகவும் மற்ற நாட்களில் தருகின்ற சத்தான ஸ்நாக்ஸ் வெரைட்டியாக இதை செய்து தரலாம். 

தேவையான பொருள்கள்: செவ்வாழைப்பழம் - 1, நாட்டுச் சர்க்கரை - 4 தேக்கரண்டி, ராகி மாவு, அரிசி மாவு - தலா கால் கிண்ணம், முந்திரிப் பருப்பு, திராட்சை - தலா 10, தேங்காய்த் துருவல் - 4 தேக்கரண்டி, சர்க்கரை - 1 தேக்கரண்டி, பால், உப்பு, நெய் - தேவையான அளவு (அளவாக 2 தேக்கரண்டி)

செவ்வாழை

செய்முறை விளக்கம் : முதலில் மிக்ஸி ஜாரில் தோல் உரித்த செவ்வாழைப்பழம் மற்றும் நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து மையமாக அரைத்து எடுக்கவும். பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த செவ்வாழை விழுதை ஊற்றி, அதனுடன் ராகி மாவு, அரிசி மாவு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்துச் சப்பாத்தி மாவு பதத்திற்குத் தண்ணீருக்குப் பதிலாகத் தேவையான அளவு பால் தெளித்துப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவைச் சிறிய குட்டி உருண்டைகளாக உருட்டி, இட்லிப் பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் நெய் ஊற்றிச் சூடானதும், முந்திரிப் பருப்பு மற்றும் திராட்சை சேர்த்து வதக்கவும். அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாகக் கிளறவும். பிறகு ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்த பின், ஏற்கனவே வேகவைத்து வைத்துள்ள கொழுக்கட்டை உருண்டைகளை அதில் சேர்த்து லேசாகக் கிளறி இறக்கினால், மணமணக்கும் ராகி செவ்வாழை கொழுக்கட்டை தயார்.