விநாயகர் சிலை சரிந்து விழுந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வரவேற்பு நிகழ்ச்சியின் போது, ராட்சத விநாயகர் சிலை எதிர்பாராதவிதமாகச் சரிந்து விழுந்ததில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கும் 10 நாள் கணேஷோத்சவ விழாவை முன்னிட்டு, மும்பை பூலேஷ்வரில் உள்ள ஜெய் அம்பெ சவுக் (கபூதர்கானா அருகே, பலராம் மெர்ச்சன்ட் சாலை) பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் ராட்சத விநாயகர் சிலை மக்கள் பார்வைக்காகக் கொண்டு வரப்பட்டது.

விநாயகர் சிலையை வரவேற்பதற்காகத் திரளான பொதுமக்கள் திரண்டிருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக அந்த ராட்சத சிலை நிலைகுலைந்து பொதுமக்கள் மீது சரிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி சங்கத் நெவ்ஷே (33) மற்றும் பிரிஜேஷ் ஹேமந்த் ஜோஷி (30) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், 2 பெண் குழந்தைகள் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த வைபவ் கெனந்த் (38), பவன் சௌராசியா (25), லாவண்யா கானர் (5), திவ்யா கானர் (7) மற்றும் குணால் காஷித் (26) ஆகியோர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்திற்குத் தீயணைப்புப் படையினர், காவல்துறையினர் மற்றும் மாநகராட்சிப் பணியாளர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
