குக்கரில் வெந்த 'கஞ்சா பிரியாணி'.. விசிலடித்ததும் மாட்டிக்கொண்ட கஞ்சா கடத்தல்காரர்!

 
குக்கர் குக்கர்

கேரளாவில் போலீசாரின் சோதனையில் இருந்து தப்பிக்கச் சமையல் குக்கருக்குள் கஞ்சா பொட்டலத்தைப் பதுக்கி வைத்த நபர், குக்கர் அடித்த 'விசில்' சத்தத்தால் கம்பி எண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள விசித்திரச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் சட்டவிரோதமாகக் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கிருந்த பினீஷ் (40) என்பவரின் வீட்டிற்குள் திடீரென நுழைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசார் வீட்டிற்குள் நுழைந்த அதே விநாடியில், வீட்டில் இருந்த 401 கிராம் கஞ்சா பொட்டலத்தை எங்கு மறைப்பது என்று தெரியாமல் பினீஷ் பதறியுள்ளார். சட்டென்று சமையலறைக்கு ஓடிய அவர், அங்கு அடுப்பில் வெந்து கொண்டிருந்த பிரஷர் குக்கர் சாதத்திற்கு நடுவே அந்த கஞ்சா பாக்கெட்டை அவசர அவசரமாகப் புதைத்து மூடி வைத்துள்ளார்.

கஞ்சா கடத்தல்

தொடர்ந்து வீட்டிற்குள் வந்த போலீசார் பீரோ, மெத்தை, சமையலறை டப்பாக்கள் என வீடு முழுவதும் அங்குலம் அங்குலமாகத் தேடிப் பார்த்தனர். ஆனால், அவர்களுக்கு எங்குமே கஞ்சா கிடைக்கவில்லை. இதனால் போலீசார் ஏமாற்றத்துடன் திரும்ப நினைத்த தருணத்தில் தான் அந்த 'அதிர்ஷ்ட விபத்து' அரங்கேறியது.

திடீரென சமையலறையில் இருந்த குக்கர் பலத்த சத்தத்துடன் 'விசில்' அடித்தது. அப்போது குக்கரில் இருந்து வந்த நீராவியுடன் சேர்ந்து, சாதத்தின் வாசனைக்கு மாறாகக் கம்மென்று 'கஞ்சா' வாசனை வீடு முழுவதும் பரவியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் உடனடியாக அடுப்பை அணைத்துவிட்டு, சூடாக இருந்த குக்கரைத் திறந்து சோதனையிட்டனர்.

அப்போது குக்கருக்குள் வெந்து கொண்டிருந்த சாதத்திற்கு நடுவே, பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டுப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 401 கிராம் கஞ்சா பொட்டலத்தைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, சமையல் குக்கரில் கஞ்சா சமைக்க முயன்ற பினீஷை போலீசார் அதிரடியாகக் கைது செய்து, அவரிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். சாதுரியமாகப் பதுக்கியதாக நினைத்து குக்கர் விசிலால் மாட்டிக்கொண்ட இந்த கடத்தல்காரரின் வைரல் வீடியோ தற்பொழுது இணையத்தில் நெட்டிசன்களால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.