வெள்ளைப்பூண்டு கிலோ கொள்முதல் விலை ரூ.500 ஆக உயர்வு - அறுவடைப் பணியில் விவசாயிகள் மும்முரம்!
நீலகிரி மாவட்டத்தில் விளையும் வெள்ளைப்பூண்டிற்கு மேட்டுப்பாளையம் சந்தைகளில் வரலாறு காணாத வகையில் கிலோ ரூ.500 வரை கொள்முதல் விலை கிடைப்பதால், அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்து அறுவடைப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து சந்தைகளுக்கு வரும் வெள்ளைப்பூண்டு வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது. வரத்து குறைந்த நிலையிலும் சந்தைகளில் பூண்டுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதன் கொள்முதல் விலை மளமளவென உயர்ந்துள்ளது.

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள வெள்ளைப்பூண்டுகள், மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கிலோ ஒன்றுக்கு ரூ.450 முதல் ரூ.500 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
வழக்கத்தை விட மிகச் சிறந்த கொள்முதல் விலை கிடைத்து வருவதால், பூண்டு சாகுபடி செய்துள்ள நீலகிரி விவசாயிகள் தோட்டங்களில் பூண்டுகளை அறுவடை செய்து சந்தைக்கு அனுப்பும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
