சேலம் தனியார் ஆலையில் வாயுக்கசிவு.. 6 பேர் மருத்துவமனையில் அனுமதி!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே இயங்கி வரும் தனியார் ஜவ்வரிசி ஆலையில் திடீரென நச்சு வாயுக்கசிவு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆத்தூர் அருகே உள்ள தனியார் ஜவ்வரிசி ஆலை ஒன்றில், எதிர்பாராத விதமாக ஆபத்தான நச்சு வாயு கசியத் தொடங்கியது. இதில் ஆலையில் பணியில் இருந்த தொழிலாளர்கள் மற்றும் அருகிலிருந்தவர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதியுற்றனர். பாதிக்கப்பட்ட 6 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், வாயு மேற்கொண்டு பரவாமல் இருக்கவும், கசிவை அடைக்கவும் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிரமாகப் போராடி வருகின்றனர்.

வாயுக்கசிவுக்கான துல்லியமான காரணம் என்ன? ஆலையின் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா? என்பது குறித்துக் காவல் துறையினரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
