காயத்ரி கோபிசந்த், திவ்யா தேஷ்முக் உட்பட 17 பேருக்கு அர்ஜுனா விருது: மத்திய அரசு அறிவிப்பு!

 
காயத்ரி கோபிசந்த் திவ்யா தேஷ்முக்

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருண் குமார் மிஸ்ரா தலைமையிலான தேர்வுக் குழு பரிந்துரைத்தப் பட்டியலிலிருந்து 17 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 'மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா' விருதுக்கு எந்தவொரு விளையாட்டு வீரரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர் ஐ. அருமைநாயகத்திற்கு வாழ்நாள் சாதனைக்கான அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தடகளத்தில் தேஜஸ்வின் சங்கர், பிரியங்கா கோஸ்வாமி, முகமது அஜ்மல், செஸ் விளையாட்டில் விதித் குஜராத்தி, திவ்யா தேஷ்முக், பேட்மிண்டன் விளையாட்டில் காயத்ரி கோபிசந்த், ட்ரீசா ஜாலி, ஹாக்கியில் ராஜ்குமார் பால், லால்ரெம்சியா, கபடியில் சுர்ஜீத், பூஜா, துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் அகில் ஷியோரன், துடுப்புப் படகு அரவிந்த் சிங், குத்துச்சண்டையில் நரேந்தர், பாரா-விளையாட்டுகள் தனுஷ் காந்த் (துப்பாக்கி சுடுதல்), ருத்ராம்ஷ் கந்தேல்வால் (துப்பாக்கி சுடுதல்), ஏக்தா பயான் (தடகளம்) ஆகியோருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

துரோணாச்சார்யா விருது (பயிற்சியாளர்கள்) பர்வீர் சிங், சோட்டே லால் யாதவ், நேஹா சவானுக்கும், துரோணாச்சார்யா விருது (வாழ்நாள் சாதனை): தர்மேந்திர யாதவ், வீரேந்தர் குமாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.