ஜெம் வீரமணி விவகாரம்.. ஊடக விவாதங்களுக்கும் பாலியல் குற்ற வீடியோக்களை வெளியிடவும் உயர்நீதிமன்றம் தடை!
ஜெம் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கு தொடர்பாக ஊடகங்கள் விவாதங்கள் நடத்தவும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடவும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தடை விதித்துள்ளது.
துளிர் அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். அதன்படி, ஜெம் வீரமணி விவகாரம் குறித்து ஊடகங்கள் எந்தவிதமான விவாதங்களையும் நடத்தக் கூடாது என்று திட்டவட்டமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான எந்தவொரு வீடியோவையும் ஊடகங்களோ அல்லது சமூக வலைதளங்களோ வெளியிடக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிமன்றம், "பத்திரிகை சுதந்திரம் என்பது ஊடக விசாரணை (Media Trial) நடத்துவதற்கான உரிமை அல்ல" என்று தெளிவாகக் குறிப்பிட்டது.
