ஜெம் வீரமணி வழக்கில் அதிரடி... சிறுமிகள் தொடர்பான வீடியோ, புகைப்படங்களை வெளியிட தடை!

 
ஜெம் வீரமணி

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பான வீடியோக்களை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக விவாதங்கள் நடத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜெம் வீரமணி வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீடியோ காட்சிகள் சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியானதாகக் கூறி, அவற்றை நீக்கவும், மேலும் வெளியிடுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கக் கோரி துளிர் அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வீரமணி

இந்த மனு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வீடியோக்கள் வெளியிடப்படுவதால் அவர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு பாதிப்பு ஏற்படுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.காவல்துறை தரப்பில், இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 4 சிறுமிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், வீடியோக்கள் வெளியான சமூக வலைதளப் பக்கங்களை முடக்கக் கோரி கூகுள் மற்றும் மெட்டா நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்தது.

வழக்கு தொடர்பான வாதங்களைக் கேட்ட நீதிபதி, பத்திரிகை சுதந்திரம் என்பது ஊடக விசாரணை நடத்துவதற்கான உரிமை அல்ல எனக் குறிப்பிட்டார். இதையடுத்து, ஜெம் வீரமணி வழக்கு தொடர்பான வீடியோக்களை ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட தடை விதித்ததுடன், இந்த வழக்கு குறித்து விவாதங்கள் நடத்தவும் தடை விதித்தார்.

கிரானைட் வீரமணி

மேலும், வழக்கின் முன்னேற்றம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், காவல்துறை வாரம் ஒருமுறை செய்திக்குறிப்பு வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகள், காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பகிர்வது POCSO சட்டத்தின் கீழ் குற்றம் என்றும், அவற்றை பொதுவெளியில் பகிர வேண்டாம் என்றும் சென்னை காவல்துறை ஏற்கனவே எச்சரித்துள்ளது.