ஜெம் வீரமணி பாலியல் வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் உட்பட மேலும் 2 பேர் கைதாக வாய்ப்பு!
தொழிலதிபர் ஜெம் வீரமணியை ஆபாச வீடியோக்களைக் காட்டி மிரட்டி ரூ.70 கோடி பறித்த வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் உள்ளிட்ட முக்கிய அரசியல் புள்ளிகள் மற்றும் காவல்துறை அதிகாரி மீது கைது நடவடிக்கை பாய உள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
'ஜெம் கிரானைட்' அதிபர் வீரமணி சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகப் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுப் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
சாந்தி மற்றும் மகேந்திர சிம்கன் தங்களது வீட்டில் கண்காணிப்புக் கேமரா மூலம் வீரமணியின் நடவடிக்கைகளைப் பதிவு செய்து 2 பென்டிரைவ்களில் சேமித்துள்ளனர். இதனை வைத்துப் பணம் பறிக்கத் திட்டமிட்ட அவர்கள், காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் ஒருவர் மற்றும் தனிக் கட்சித் தலைவர் ஒருவர் மூலமாக வீரமணியிடம் பேரம் பேசியுள்ளனர்.

அரசியல் பிரமுகர்களின் மிரட்டலுக்குப் பயந்து வீரமணி முதற்கட்டமாக ரூ.10 கோடி வழங்கியுள்ளார். இதில் ரூ.8 கோடியை அரசியல் பிரமுகர்கள் இருவரும் பங்கிட்டுக் கொள்ள, சாந்தி தம்பதியினருக்கு ரூ.2 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. இதில் அதிருப்தியடைந்த தம்பதியினர், ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவ்களைக் காவல்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவிடம் ஒப்படைத்தனர்.
வழக்கு விபசார தடுப்புப் பிரிவுக்கு மாறிய நிலையில், அங்குப் பணியாற்றிய அதிகாரி ஒருவர் வீரமணியைக் கைது செய்யாமல் இருக்க ரூ.60 கோடி லஞ்சமாகக் கோரியுள்ளார். இதையடுத்து கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள தனது நிலத்தை ரூ.80 கோடிக்கு விற்ற வீரமணி, அதில் ரூ.60 கோடியைக் குறிப்பிட்ட அதிகாரியிடம் கொடுத்துள்ளார். இந்த விவரங்கள் வீரமணியின் டைரியில் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே வழக்கை முடிக்கக் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் நிராகரித்த நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய் அவர்களின் நேரடி உத்தரவின் பேரில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.70 கோடி கைமாறியதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வரும் நிலையில், குறிப்பிட்ட காங்கிரஸ் பிரமுகர், அரசியல் கட்சித் தலைவர், இடைத்தரகர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது விரைவில் கைது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
