ஜெனரல் தீராஜ் சேத் 31வது ராணுவத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்பு
இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாகப் பணியாற்றி வந்த ஜெனரல் உபேந்திர திவேதி, தனது 40 ஆண்டுகால ராணுவச் சேவையை நிறைவு செய்து இன்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் 31-வது புதிய தலைமைத் தளபதியாக ஜெனரல் தீரஜ் சேத் இன்று மதியம் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதுடெல்லியில் உள்ள சவுத் பிளாக் வளாகத்தில் நடைபெற்ற இந்த பொறுப்பேற்பு விழாவில், ஓய்வுபெறும் தளபதி உபேந்திர திவேதியிடமிருந்து ராணுவத்தின் புதிய பொறுப்புகளை ஜெனரல் தீரஜ் சேத் ஏற்றுக்கொண்டார்:
ஆரம்பகாலப் பயணம்: புகழ்பெற்ற தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பட்டம் பெற்ற தீரஜ் சேத், கடந்த 1986-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்திய ராணுவத்தின் கவசப் படையில் ஓர் இளம் அதிகாரியாகத் தனது ராணுவப் பயணத்தைத் தொடங்கினார்.
அரிய சாதனை: தனது சுமார் 40 ஆண்டுகால ராணுவப் பணியில், இந்தியாவின் இரு முக்கியப் பிராந்திய ராணுவக் கட்டளைகளான 'தெற்கு கட்டளை' மற்றும் 'தென்மேற்கு கட்டளை' ஆகிய இரண்டிற்கும் தலைமை தாங்கிய பெருமையைப் பெற்றவர் இவர்.
ஜெனரல் தீரஜ் சேத் இந்திய ராணுவத்தின் செயல்பாட்டு உத்திகள், எல்லைப் பாதுகாப்பு, திறன் மேம்பாடு மற்றும் நிறுவன மறுசீரமைப்புகளில் மிக நீண்ட அனுபவத்தைக் கொண்டவர்.
இந்திய ராணுவத்தை தற்சார்பு கொண்ட, தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளும் நவீனப் படையாக மாற்றுவதற்கான 'decade of transformation' உத்தியில் இவர் முதன்மைப் பங்காற்றி வருகிறார்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்புப் படை, பாலைவனப் பிராந்தியத்தில் கவசப் படைப் பிரிவு மற்றும் புதுடெல்லி பிராந்தியத்தின் தளபதியாகப் பணியாற்றியதுடன், ராணுவத்தின் துணைத் தளபதியாகவும் இவர் பங்காற்றியுள்ளார்.
உலகளவில் மாறிவரும் புவிசார் அரசியல் சூழல் மற்றும் எல்லையோரப் பாதுகாப்புச் சவால்களுக்கு மத்தியில், இந்திய ராணுவத்தின் மிக உயரிய பொறுப்பை ஜெனரல் தீரஜ் சேத் ஏற்றுக்கொண்டிருப்பது பாதுகாப்புத் துறை வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
