ஜிம் பயிற்சியாளருடன் சேர்ந்து கணவரை கொல்ல முயன்றதாக மனைவி மீது குற்றச்சாட்டு... டெல்லியில் அதிர்ச்சி!
டெல்லி அரசு அலுவலகத்தில் கணக்காளராகப் பணியாற்றும் கணவரைக் கொல்ல முயன்றதாக அவரது மனைவியும், ஜிம் பயிற்சியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தின் வசுந்தரா பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
சஷாங்க் கந்தாரியா (35) என்பவர் தனது மனைவி பிரியா ஷர்மா மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். கடந்த 26-ம் தேதி அதிகாலை, வீட்டில் குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்த சஷாங்கை மர்ம நபர் கத்தியால் பலமுறை தாக்கிவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் உதவிக்கு வந்தனர். படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசார் நடத்திய விசாரணையில், பிரியாவுக்கும் ஜிம் பயிற்சியாளர் பிரதாப் சிங்குக்கும் இடையே தொடர்பு இருந்ததாகவும், இருவரும் சேர்ந்து சஷாங்கைக் கொல்லத் திட்டமிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு பிரியா உதவியதாகவும், தாக்குதல் நடந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சஷாங்கின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பிரியா மற்றும் பிரதாப் சிங்கைக் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
