மிளகாய், மஞ்சள் தூய் பயன்படுத்தி பிரம்மாண்ட ஓவியம்... 3-வது முறையாகக் கின்னஸ் சாதனை படைத்த கர்நாடக கலைஞர்!
இந்தியாவின் வளமான கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் உலகறியச் செய்யும் வகையில், சமையலறைப் பொருட்களான மஞ்சள் மற்றும் மிளகாய்த்தூளைக் கொண்டு பிரம்மாண்ட ஓவியம் வரைந்து கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கலைஞர் அமர் காலே புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
கர்நாடக மாநிலம் தார்வாட்டில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஒரு டென்னிஸ் மைதானத்தின் அளவில் மூன்றில் இரண்டு பங்கு பரப்பளவில் 6 கிலோ மஞ்சள் தூள் மற்றும் 5 கிலோ மிளகாய்த்தூளை மட்டுமே பயன்படுத்தி இந்த அரிய கலைப்படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் வரைபட வடிவத்திற்குள், உலகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னமான 'ஹம்பி கல் தேர்' உருவத்தை அமர் காலே தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார். எளிய சமையலறைப் பொருட்கள் கூட வரலாற்று சிறப்புமிக்க கலையாக மாற முடியும் என்பதை அவர் நிருபித்துள்ளார். மேலும், ஓவியம் வரைந்து முடித்த பின்னர், மீதமுள்ள மஞ்சள் மற்றும் மிளகாய்த்தூள் வீணாகாமல் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்துவிட்டுப் பணியாற்றி வந்த 29 வயதான அமர் காலே, கலை மீது கொண்ட தீவிரக் காதலால் 2018-ஆம் ஆண்டில் தனது பொறியியல் வேலையைத் துறந்து முழுநேரக் கலைஞராக மாறினார். சுய கற்றல் மூலம் கடந்த 8 ஆண்டுகளாக ஓவியத் துறையில் பல்வேறு சாதனைகளைப் புரிந்து வரும் இவருக்கு, சிறுவயது முதலே இவரது தந்தையே ஊக்க மருந்தாக இருந்துள்ளார்.
அமர் காலே கின்னஸ் சாதனை படைப்பது இது முதல் முறையல்ல. 2021-ஆம் ஆண்டு "ஒரு நிமிடத்தில் அதிக கைரேகைகளைப் பதிவு செய்தவர்" என்ற முதல் கின்னஸ் சாதனை. 2026 பிப்ரவரியில் "வாயால் வரையப்பட்ட உலகின் மிகப்பெரிய ஓவியம்" என்ற பிரிவில் இரண்டாவது கின்னஸ் சாதனை. தற்போது: மஞ்சள் மற்றும் மிளகாய்த்தூள் ஓவியம் மூலம் 3-வது முறைக் கின்னஸ் பட்டத்தைக் கைப்பற்றி 'ஹேட்ரிக்' சாதனை படைத்துள்ளார். இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள இவருக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
