தூத்துக்குடியில் அரசுப் பள்ளியில் பரிசுப் பொருட்கள் பதுக்கல்... 5 மணி நேரம் நீடித்த சோதனை!

 
சோதனை சோதனை

சட்டமன்றத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதைத் தடுக்கத் தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு முக்கியச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

பள்ளிக் கட்டிடத்தின் சில அறைகளில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பெரும் அளவிலான பரிசுப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் பதுக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார், பள்ளியின் தலைமை ஆசிரியரை வரவழைத்தனர்.

சோதனை தேர்தல் நடத்தை விதிமுறைகள் விதிகள்

பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறை, ஆய்வகம் மற்றும் அலுவலக அறைகளின் பூட்டுகளைத் திறந்து சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக அங்கு சோதனை நடத்தப்பட்டது. சோதனை குறித்த தகவல் பரவியதும், திமுக, அதிமுக மற்றும் தவெக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் பள்ளி வாசலில் திரண்டனர். சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அல்லது பணம் குறித்த விபரங்களை அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கட்சியினர், "யார் இந்தப் பொருட்களை இங்கே வைத்தது? எதற்காக இந்த மர்மம்?" எனக் கூறி போலீசாரின் வாகனங்களை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர்.

தேர்தல் சோதனை பறிமுதல் போலீசார்

பள்ளியில் இருந்து சில முக்கிய ஆவணங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய சில பொட்டலங்களைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பாகத் தேர்தல் நடத்தும் அதிகாரி தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகவில்லை. "சோதனை முடிவுகள் முறையாகத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படும்" எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.