செஞ்சி அருகே பெற்றோருடன் தூங்கிய 7 வயது சிறுமி திடீர் மாயம்! மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர தேடுதல்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, வீட்டில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி திடீரென காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு பெற்றோருடன் உறங்கிய சிறுமி, திங்கள்கிழமை அதிகாலையில் எழுந்து பார்த்தபோது காணவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர், வீடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடியும் சிறுமி கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், சிறுமி காணாமல் போனது குறித்து விசாரணையைத் தொடங்கினர். சிறுமி கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் காணாமல் போனாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சிறுமியைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்த சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. சிறுமி படுத்திருந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்துச் சென்ற நாய், அப்பகுதியில் உள்ள முக்கியப் பாதைகள் வழியாக ஓடியது. மோப்பநாய் காட்டிய திசை மற்றும் அப்பகுதியின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் சிறுமியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
