செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்... பிரபல ரவுடியிடம் 4-வது முறையாக கிடுக்கிப்பிடி விசாரணை - 26 நாட்களாக நீடிக்கும் மர்மம்!

 
சிறுமி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயதுச் சிறுமி மாயமாகி 26 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தடயம் ஏதும் கிடைக்காமல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திணறி வருகின்றனர். இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் பரதன்தாங்களைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4-வது முறையாகத் தனி இடத்தில் வைத்துக் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 7 வயதுச் சிறுமி ஹேமலதா (என்ற ஹேமாவதி). கடந்த மாதம் 11-ஆம் தேதி இரவு வீட்டில் பெற்றோர் அருகில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி, மறுநாள் அதிகாலை திடீரெனக் காணாமல் போனார். சிறுமி மாயமாகி 26 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், வழக்கு விசாரணையை ஏற்றுள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 16 நாட்களாகத் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமி காணவில்லை விழுப்புரம் கடத்தல்

பல்வேறு கோணங்களில் தேடுதல் வேட்டை நடத்தியும், சிறுமி குறித்து இதுவரை எந்தவொரு சிறு தடயமும் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஆலம்பூண்டி கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் மூழ்கியுள்ளனர். வழக்கை விரைந்து முடித்துச் சிறுமியைக் கண்டுபிடிக்கச் சி.பி.சி.ஐ.டி. காவல் துணை சூப்பிரண்டுகள் வேல்முருகன் மற்றும் கீதா ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் ஆலம்பூண்டி கிராமத்திலேயே தொடர்ந்து முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி

விசாரணையின் ஒரு பகுதியாக, ஏற்கனவே சந்தேகத்தின் பேரில் 3 முறை விசாரிக்கப்பட்ட பரதன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான பிரபல ரவுடியை நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் 4-வது முறையாகத் தனியாக அழைத்துச் சென்றுள்ளனர்.

ரகசிய இடம் ஒன்றில் வைத்து அந்த ரவுடியிடம் அதிகாரிகள் தீவிரமாகக் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில் சிறுமி மாயமான வழக்கிற்கு முக்கியத் திருப்புமுனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.