செஞ்சி சிறுமி மாயமான வழக்கு.. பாட்டி, உறவினர்களிடம் 2-வது முறையாக சிபிசிஐடி விசாரணை!

 
செஞ்சி சிறுமி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பிறந்தநாள் விழா முடிந்து மாயமான 7 வயது சிறுமியின் வழக்கில், காவல்துறையினரின் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததால் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தற்போது சிபிசிஐடி அதிகாரிகள் தங்களது விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சிறுமி காணவில்லை விழுப்புரம் கடத்தல்

சென்னை சிபிசிஐடி துணைப் போலீஸ் சூப்பிரண்டு கீதா தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், சிறுமியின் பாட்டி சாந்தியிடம் இன்று 2-வது முறையாகத் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சிறுமி காணாமல் போன அன்றைய தினம் வீட்டில் நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் குறித்து விரிவாகக் கேட்டறிந்தனர்.

சிறுமி மாயமானதற்கு முந்தைய நாள் மாலையில் அவரது பிறந்தநாள் விழா வழக்கத்திற்கு மாறாகக் கொண்டாடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கேக் வெட்டிய போது அங்கு உடனிருந்ததாக அடையாளம் காணப்பட்ட 10 பேரை நேரில் வரவழைத்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

சிறுமி

மேலும், சிறுமியின் அக்காவுக்கு சமீபத்தில் திருமணத்திற்காக வரன் பார்க்கப்பட்ட நபரிடமும் குடும்பப் பின்னணி மற்றும் சந்தேகங்களின் அடிப்படையில் விசாரணையை நீடித்துள்ளனர். கூடுதலாக, வழக்கின் முட்டுக்கட்டையை உடைத்து விசாரணையை விரைவுபடுத்த காஞ்சிபுரம் சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகனும் கூடுதல் விசாரணை அதிகாரியாகக் களமிறக்கப்பட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சிசிடிவி காட்சிகள், ரயில் நிலையப் பதிவுகள் ஆகியவற்றைச் சோதனையிட்டுச் சிறுமியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.