ராணிப்பேட்டையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை 35 நாட்களுக்குப் பின் ஆந்திராவில் மீட்பு - 5 பேர் கைது!

 
பெண் குழந்தை பெண்குழந்தை மாயம் கடத்தல்

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை பகுதியில் கடத்தப்பட்ட 1 வயது பெண் குழந்தையை 35 நாட்களுக்குப் பிறகு ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா அருகே தனிப்படைப் போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சேகர் – பிரேமா தம்பதியரின் 1 வயதுப் பெண் குழந்தை மகேஸ்வரி. கடந்த மாதம் செப்டம்பர் 24-ம் தேதி நள்ளிரவு வீட்டின் வாசலில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்த போது குழந்தை திடீரென மாயமானது. இது குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி கிரண் ஸ்ருதி உத்தரவின்படி 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுச் சிசிடிவி காட்சி ஆய்வுகளுடன் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.

சிறுமி காணவில்லை விழுப்புரம் கடத்தல்

தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில் குழந்தை ஆந்திராவிற்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ரேணிகுண்டா ரயில் நிலையம் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த குழந்தை மகேஸ்வரியைப் போலீசார் பத்திரமாக மீட்டனர்.

குழந்தையைக் கடத்தி வைத்திருந்த மல்லீஸ்வரி உட்பட 2 பேர் மற்றும் குழந்தையைக் கடத்திச் சென்று அவர்களிடம் கொடுத்த ராணிப்பேட்டையைச் சேர்ந்த தம்பதியினர் உட்பட மொத்தம் 5 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தை விற்பனைக்காகக் கடத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

சிறுமி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் கடந்த அக்.11ம் தேதி பிறந்தநாளன்று மாயமான 7 வயது சிறுமி ஹேமலதாவைத் தேடும் பணி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு, சிறுமியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சகோதரி படித்த நர்சிங் கல்லூரி நிர்வாகிகள் உட்பட 20-க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.