200 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தை... தேரில் ஊர்வலமாக அழைத்து வந்த உறவினர்கள்!

 
பெண் குழந்தை

 

 

மகாராஷ்டிர மாநிலம் பீட் பகுதியில், சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளதை அந்த நாட்டு மக்கள் மற்றும் குடும்பத்தினர் ஒரு திருவிழா போல் கோலாகலமாகக் கொண்டாடியுள்ளனர். தஹிஃபாலே என்ற அந்தக் குடும்பத்தில் பல தலைமுறைகளாகப் பெண் குழந்தையே பிறக்காத நிலையில், தற்போது பிறந்துள்ள பெண் குழந்தைக்கு 'கார்கி' எனப் பெயரிட்டுள்ளனர்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பச்சிளம் குழந்தையையும் தாயையும் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர வைத்து, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இத்தனை வருடங்களாகக் குடும்பத்தில் பெண் குழந்தை இல்லை என்ற குறை தற்போது நீங்கியுள்ளதாகவும், தங்கள் வீட்டிற்கு மகாலட்சுமியே வந்துள்ளதாகவும் குழந்தையின் தாத்தா மற்றும் பாட்டி மிகுந்த உணர்ச்சிவசப்பட்டுத் தெரிவித்துள்ளனர்.

பெண் குழந்தைகள் குடும்பத்திற்குச் சுமை என்ற பழைய எண்ணங்களை மாற்ற வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்தப் பெருவிழா அமைந்துள்ளது. குடும்பத்தினரின் இந்த வித்தியாசமான மற்றும் நெகிழ்ச்சியான வரவேற்புச் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகிப் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.