தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சிறுமி பலி... மற்றொரு சிறுமியை தேடும் பணி தீவிரம்!
தூத்துக்குடி மாவட்டம் முக்கூடல் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி தூத்துக்குடியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு சிறுமியை தேடு பணிகள் தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நாக அர்ஜுனன், மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். நண்பர்களான இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே வேளார்குளத்தில் உள்ள நண்பர் வீட்டுக்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றனர்.

முத்துமாலையம்மன் கோவில் அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, 6 பேர் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் அவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதனை பார்த்ததும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக 4 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதில் நாக அர்ஜுனன் மகள் வைஷ்ணவி (13), அய்யப்பன் மகள் மாரி அனுஷ்யா (16) ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கினர். அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து சேரன்மாதேவி, அம்பை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆற்றில் இறங்கி சிறுமிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பல மணி நேர தேடுதலுக்கு பிறகு வைஷ்ணவி பிணமாக மீட்கப்பட்டாள். அவளது உடலை தீயணைப்பு வீரர்கள் கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், வைஷ்ணவி உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

தொடர்ந்து மற்றொரு சிறுமி மாரி அனுஷ்யாவை தீவிரமாக தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியாததல், அவரின் கதி என்னவென்று தெரியவில்லை. பின்னர் இரவு நேரமானதால், தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. சிறுமியை தேடும் பணி நாளை தொடரும் என போலீசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காணும் பொங்கலை கொண்டாட வந்த இடத்தில், தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
