40 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுமி... காவலரின் வீரச்செயலால் நெகிழ்ச்சி... வைரல் வீடியோ!
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ பகுதியில் 40 அடி ஆழமான கிணற்றுக்குள் தவறி விழுந்த 5 வயது சிறுமி, சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். விஷவாயு தாக்கும் அபாயம் நிறைந்த அச்சூழலில் காவல்துறையினர் துணிச்சலாகச் செயல்பட்டுச் சிறுமியின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
விபத்து நடந்தவுடன் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், விஷவாயு மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவும் அந்த ஆழமான கிணற்றுக்குள் இறங்க அனைவரும் தயங்கினர். அப்போது அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர், துணிச்சலாக ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கினார்.
தீவிரமாகப் போராடிச் சிறுமியை மீட்டுக் கொண்டுவந்த காவலரின் செயலுக்குப் பொதுமக்களும் உயர் அதிகாரிகள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். உரிய நேரத்தில் விரைந்து செயல்பட்டதால் சிறுமி உயிர் பிழைத்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
